search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறையும் பொருட்களின் எடை"

    சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு பின்னர் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் பொருட்களின் எடை, எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. #GST
    சென்னை:

    மத்திய-மாநில அரசுகள் பொருட்களுக்கு பல்வேறு வகையான மறைமுக வரிகளை விதித்து வந்தன. இதற்கு மாற்றாக ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி’ என்ற முழக்கத்தை முன்வைத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது.

    1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் ஜி.எஸ்.டி.க்கான விதையை உருவாக்கினார். அதனை தற்போது பிரதமர் நரேந்திர மோடி விதைத்துள்ளார்.



    அதன்படி, ஜி.எஸ்.டி. 0 சதவீதம் (வரி விலக்கு), 3 சதவீதம், 5 சதவீதம், 17 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என பொருட்களின் தன்மைக்கு ஏற்ப 6 நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே குறைவான வரி விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பொருட்கள் அதிக வரி விதிப்பிலும், அதிக வரி விதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் குறைவான வரி விதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    அதன்படி, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிராம் எடையுடைய சோப்பு, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர் ரூ.30 ஆக அதிகரித்துள்ளது.

    இதேபோல அரை கிலோ சோப்பு தூள் ரூ.93-ல் இருந்து ரூ.95 ஆகவும், தேங்காய் எண்ணெய் 250 மி.லி. ரூ.83-ல் இருந்து ரூ.105 ஆகவும் அதிகரித்துள்ளது.

    துணிகளை துவைத்த பின்னர் வாசனைக்காக சேர்க்கப்படும் சோப்பு நுரை 800 மி.லி. ரூ.205-ல் இருந்து ரூ.225 ஆகவும், டீத்தூள் ¼ கிலோ ரூ.135-ல் இருந்து ரூ.138 ஆகவும், தலை முடிக்கு போடும் ஷாம்பூ 7 மி.லி. ரூ.3-ல் இருந்து ரூ.4 ஆகவும், 5.6 கிராம் எடையுடைய சிகைக்காய் பாக்கெட் ரூ.3-ல் இருந்து ரூ.4 ஆகவும், தேன் 50 மி.லி. ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், தலைக்கு தேய்க்கும் தைலம் 55 மி.லி. ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

    முகத்துக்கு பூசப்படும் பவுடர் 100 கிராம் ரூ.63-ல் இருந்து ரூ.76 ஆகவும், பேரீச்சம் பழம் 200 கிராம் ரூ.39-ல் இருந்து ரூ.42 ஆகவும், கடிகாரத்துக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி ஒன்று 13 ரூபாய் 50 காசில் இருந்து ரூ.15 ஆகவும், 20 கிராம் எடையுடைய சாக்கலேட் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும், ஜாம் 500 கிராம் ரூ.120-ல் இருந்து ரூ.135 ஆகவும், தலை முடிக்கு தேய்க்கும் ‘டை’ 15 மி.லி. ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும், ஊறுகாய் 300 மி.லி. ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆகவும், 100 கிராம் ‘டூத்பேஸ்ட்’ (பற்பசை) ரூ.45-ல் இருந்து ரூ.49 ஆகவும் அதிகரித்துள்ளது.

    கற்பூரம் (சிறியது) ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்டது, ரூ.2 ஆக அதிகரித்துள்ளது.

    பிஸ்கட் வகைகளில் விலையை அதிகரிக்காமல் அதன் எடை அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஊதுபத்திகளிலும் விலையை அதிகரிக்காமல், அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஜி.எஸ்.டி.க்கு பின்னர் பல பொருட்களின் எடை, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.15 ஆயிரத்து 525-க்கு விற்பனை செய்யப்பட்ட பிரிட்ஜ் ரூ.17 ஆயிரத்து 100 ஆகவும், வாஷிங் மெசின் விலை ரூ.16 ஆயிரத்து 225-லிருந்து, ரூ.18 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை போன்ற நிலை வியாபாரிகளுக்கும் ஏற்படலாம் என்றும் கவலை தெரிவித்தனர். இதனால் ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெறவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். #GST

    ×